செவ்வாய் கிரக முற்றுகை போராட்டம்

ஈழ விடுதலைக்கு தடை போடும் நாடுகளின் பட்டியல் ஒன்றாக இருந்தாலும், அவற்றின் தர வரிசை மாறுபட்டதாகவே இருக்கிறது.

குறிப்பாக இலங்கை, இந்தியா, ஐ.நா, அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, ஜப்பான் என்று நீளும் எதிரிகள் பட்டியல் தனி நபர்களின் வசதிக்கு தங்குந்தாற்போல் விஷத்தன்மைக்கான தர வரிசை மாற்றி கட்டமைக்கப்படுகிறது.

இந்த தரப்படுத்தல் முறையானது தனி நபர் விருப்பம், அரசியல் கொள்கைகள், முட்டு கொடுக்கும் அமைப்புகளின் விருப்பம், காசு கொடுக்கும் கட்சிகளின் கொள்கை மற்றும் சா-பூ-த்ரீ போன்ற இதர அறிவியல் பூர்வமான முறைகளில் தயாரிக்கப்படுகிறது.

இந்த நேயர் விருப்ப பட்டியலை நியாயப்படுத்த தங்கள் தரப்பு வாதங்களையும் எடுத்து வைக்கின்றனர். மேற்குறிப்பிட்ட அனைவருமே துரோகிகள் என்பதால் கருத்து பரப்பல் செய்ய எல்லா தரப்பினருக்குமே போதுமான தரவுகள், தகவல்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால் இந்த தரப்படுத்தலில் மிக நுட்பமாக காப்பாற்றப்படும் நாடு இந்தியா தான்.

தமிழ் தேசியவாதிகள் என்று காட்டிக்கொள்ளும் பலர் இந்திய குடிமக்களாக இருப்பதனால் அவர்களின் தாய்நாட்டு பாசம் மெச்சத்தக்கதே என்றாலும், அதற்கு பின்னாலுள்ள அரசியலை நாம் சற்று ஆராய வேண்டும்.

ஈழ விடயத்தில் மனிதாபிமான அடிப்படை என்பது சற்றும் இல்லாமல், பன்னாட்டு புவிசார் அரசியலை ஆட்டுவித்து தனது படைக்கலங்களை கட்டி எழுப்பும் வாய்ப்பாக மட்டுமே முற்று முழுதாக காணும் நாடு அமெரிக்கா என்பதை சிறு பிள்ளையும் அறியும். எனவே அவர்கள் செய்யும் துரோக செயல்களை புதிதாக "கண்டுபிடித்து" சொல்ல தேவை இல்லை.

ஆனால் அந்த நிலவெறி-பணவெறி பிடித்த அமெரிக்காவும் இலங்கை விடயத்தில் சற்று அடக்கி வாசிக்க காரணம் இங்கே உள்ளூர் நாட்டமையாக வலம் வர துடிக்கும் இந்தியா தான். மலையாளிகள், முட்டாள் அரசியல்வாதிகள், தமிழர் விரோத வடஇந்தியா என பலதரப்பட்ட காரணிகளால் ஈழ விடயத்தில் இந்தியா தவறான வெளியுறவு கொள்கையை கொண்டுள்ளது. இந்திரா ஆட்சியில் மிக சிறிய இடைவெளியில் புலிகளுக்கு கிடைத்த ஆதரவை தவிர.

இன்று வரை ஈழ விடுதலைக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருப்பது இந்திய தேசம் தான். ஆனால் இங்கு போராளிகளாக தன்னை காட்டிக்கொள்பவர்கள் இந்தியாவை எதிர்க்க/முதல் எதிரியாக/காட்ட தயங்குகிறார்கள். இதற்கு பல காரணங்கள் உண்டு..

1. அடிப்படையான இந்திய பாசம்
2. அரசியல் சட்டம், காவல் துறை என்று பலவற்றை எதிர்க்க வேண்டிய தேவை வரும். அது "தேவையற்ற ஆபத்து"
3. புறக்கணிப்பு என்று எடுத்துக்கொண்டால் தன் சொந்த ஓட்டுனர் உரிமம், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் என்று பலவும் தங்களை பார்த்து பல்லிளிக்கும்.
4. இந்திய அரசமைப்பு சட்டத்தை எதிர்க்கையில் தேர்தலையும் எதிர்க்க நேரலாம் ஆனால் போராட்டத்திற்கு மாதம் தவறாது சம்பளம் தரும் முதலாளிகள் அதை விரும்பமாட்டார்கள்.

இது போன்ற பலவற்றை கொண்டு இந்தியா குற்றவாளி பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டது. ஆனால் போராட வேண்டும் என்றால் ஒரு காரணம் வேண்டுமே.. எதிர்க்க வேண்டும் என்றால் எதிரி வேண்டுமே. எனவே தனக்கும் சிக்கல் இல்லாதபடி மக்களுக்கும் சந்தேகம் வராத படி ஊடக நண்பர்களும் ஏற்றுக்கொள்ள கூடிய ஒரு எதிரி "தேர்வு" செய்யப்படுகிறான். அது தான் அமெரிக்கா.. உண்மையாகவே ஈழ விடயத்தில் புவிசார் நலனின் அடிப்படையில் பல காரியங்களை அமெரிக்கா செய்துள்ளது இவர்களுக்கு வசதியாகவும் போய் விட்டது. தரவுகளும், தேதிகளும், தகவல்களும் என்று அடுக்கப்பட்டு இந்தியா பாதுகாக்கப்பட்டு அமெரிக்கா முதல் குற்றவாளி ஆக்கப்படுகிறது.

நிலுவையில் உள்ள முதிர்ந்த அரசியல்வாதிகள் ஈழ விடயத்தில் கையாலாகாத ஆட்கள் என்பதால் வெறுப்புற்று இருந்த மாணவர் அமைப்புகள் பிற்காலத்தில் உண்டான இந்த இளம்தலைமுறை அமைப்புகளை தங்கள் "கருத்தியல் முன்னோராக" பார்க்க தொடங்கினர். அவர்களுக்கு நண்பன் போல நடித்து இந்தியாவின் மீது அவர்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டிய கோபத்தை திசை திருப்பு அமெரிக்கா, ஆப்பிரிக்கா என்று மடைமாற்றினர்.

இறுதியில் அமெரிக்க உணவகங்களில் கல் எறிந்து கலைந்து போக செய்வதே திட்டம். ஆனால் இதில் சிக்காமல் மாணவர்கள் விழிப்புடன் இருந்து இந்தியாவுக்கும் சவால் விட்டு இந்திய அரசு அலுவலகங்களையும் முற்றுகை இட்டு தங்களை யாரும் ஏமாற்றமுடியாது என்பதை மெய்ப்பித்தனர்.

எனவே கடந்த வருடம் தோல்வி அடைந்த "இந்திய சிறை மீட்பு" இந்த வருடம் மீண்டும்  முன்னெடுக்கப்படுகிறது.

அதற்காக ரேடார், போர் கருவிகள், பணம், உளவு தகவல்கள், ராணுவ பயிற்சி, பன்னாட்டு அவைகளில் பாதுகாப்பு என்று பல வகைகளில் சிங்கள அரசுக்கு உதவி செய்து, புலிகளின் இறக்குமதி வழிகளை தடை செய்து, தென் இந்திய கடல் எல்லையில் நடமாட்டங்கள்/நுழைவுகள் இல்லாமல் காவல் புரிந்து, இங்குள்ள அகதிகளை சிறை கைதிகள் போல துன்புறுத்தி என்று சகல வழிகளிலும் போராட்டத்தை முன் நின்று நசுக்கி தமிழ் இனப்படுகொலையை செவ்வனே செய்தது இந்தியா தான் என்பதை உலகமே அறியும். ஆனால் இந்த புதிய பாதிரியார்கள் கேட்காமலேயே இந்தியாவுக்கு தாமாகவே முன்வந்து "பாவ மன்னிப்பை" டோர்-டெலிவரி செய்கின்றனர்.

இங்கு குற்றவாளியை மறைத்தால் மட்டும் போதுமா அதற்கு ஒரு மாற்று குற்றவாளியை முன்னிறுத்தி திசை திருப்பினால் தானே எதிர்காலத்தின் எழுச்சிகளுக்கு தீனி போட முடியும்.. மாணவர்களையும், மக்கள் போராட்டங்களை திசை திருப்பி மழுங்கடிக்க முடியும்.. எனவே அமெரிக்காவின் பன்னாட்டு அரசியலை மையப்படுத்தி ஒரு பிரச்சாரம் இங்கே தொடங்கி உள்ளது. இந்தில் மிகவும் லாவகமாக கூட்டு பொரியல் போல இந்திய எதிர்ப்பும் கலந்து கொண்டு அமெரிக்க எதிர்ப்பு  மட்டுமே முழுவீச்சில் நடக்கிறது.

அமெரிக்கா எதிர்க்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை என்றாலும், அதற்காக இந்தியாவிற்கு எதிரான போராட்டங்கள் பலி கொடுக்கப்படுவது கொடூரம், தமிழ் இன துரோகம்.

மேற்கூறிய பல காரணிகளால் இந்தியாவே முதல் குற்றவாளி என்பது படிக்காத குக்கிராமத்து கிழவனுக்கும் கூட தெரியும். இதை மறைக்க இந்த மெத்த படித்த மேதாவிகள் போராடுவது வெட்க கேடு. இதில் இவர்களுக்கு ஆதரவாக தமிழ் ஈழ விரோத பன்னாட்டு வலைப்பின்னல் வேறு..

ராஜபக்சே மீண்டும் மீண்டும் இந்தியா தங்கள் நண்பன் என்பதையும், இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம் என்று வெளிப்படையாக சொன்னதையும் மறைத்து மக்களை முட்டாளாக்க பார்க்கிறார்கள்.

பன்னாட்டு அவையில் இலங்கையை பாதுகாப்பது முதல் அவர்களின் அன்றாட தேவைகளுக்கான எடுபிடி வேலைகள் வரை இந்தியா கூச்சமின்றி செய்து வருவது வெட்ட வெளிச்சம்.

இதன் ஒரு பகுதியாகவே இலங்கையின் வடக்கு கிழக்கில் மறுசீரமைப்பு படு ஜோராக நடந்து கொண்டிருப்பதாக உலகத்தை நம்ப வைக்க இலங்கையை விட பல மடங்கு படு ஜோராக வேலை பார்ப்பது இந்தியா தான். இதற்காக கிளிநொச்சியில் இருந்து பளை வரையில் ஆன 27 கி.மீ ரயில் பாதையை இந்தியாவே தனது IRCON (Indian Railways Construction) நிறுவனம் மூலம் 5000 கோடி செலவில் வட்டி இல்லா கடனாக அவசர அவசரமாக கட்டி கொடுத்துள்ளது.



இலங்கையில் இந்தியா போட உள்ள ரயில் பாதைகளின் மொத்த நீளம் 250 கி.மீக்கு மேல். 27 கி.மீக்கு 5000 கோடி செலவாகியுள்ளது என்கிற படி பார்த்தால் மொத்த தடங்களையும் கட்டி முடிக்க இந்தியா சுமார் 50,000 கோடி வரை இலங்கைக்காக செலவு செய்ய தயாராக உள்ளது தெளிவாகிறது.


இந்தியாவில் ஓட்டரசியல் நெருக்கடியில் கூட எந்த ரயில் பாதையையும் சரியான நேரத்தில் கட்டி முடிக்காமல் பல வருடங்கள் இழுத்தடிக்கும் இந்தியா, இலங்கையின் வடக்கு பகுதி வேலைகளை மட்டும் போர்கால அடிப்படையில் செய்து முடித்திருப்பதை எப்படி மக்கள் மன்றத்தில் இவர்கள் நியாயப்படுத்த போகிறார்கள்?

இந்த நிகழ்வு முழுக்க முழுக்க எதிர்வரும் ஐநா மனித உரிமை பேரவையின் விவாதங்களுக்கு பதில் சொல்லும் விதமாகவே இலங்கையின் சார்பாக இந்திய மூளையில் உதித்த, இந்திய பணத்தில் செலவு செய்யப்பட்ட, இந்திய உழைப்பின் மூலம் கட்டப்பட்ட ஒரு திட்டமாகும். இதை இலங்கையின் மிகப்பெரிய தமிழர் வாழ்வுரிமை சார்ந்த சாதனையாக முன்னின்று உலக அவையில் நற்சான்றிதழ் அறிக்கை வாசிக்கபோவதும் நிச்சயம் இந்தியா தான்.

மேலும் இலங்கை வீரர்களுக்கு தொடர்ந்து ராணுவ பயிற்சி கொடுத்து எதிர்காலத்தில் எந்த வித எதிர்ப்பும் புரட்சியும் உண்டாகிவிடாத அளவுக்கு அவர்களை பொத்தி பாதுகாப்பது இந்தியாவே என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இன்றும் கூட இப்படியான ஒரு அறிவிப்பை இந்தியா வெளிப்படையாக கூறுவதும் அவர்களை விட்டுவிட்டு நாம் அமெரிக்காவையும், இங்கிலாந்தையும் திட்டுவது ஆகப்பெரிய அயோக்கியத்தனம்.


ஆசியாவில் இருந்து 2000 கி.மீ தள்ளி உள்ள டீகோ கார்ஷியா (Diego Garcia) தவிர்த்து தன்னிடம் இந்திய பெருங்கடலில் வேறு குறிப்பிடத்தக்க போர்ப்படை தளங்கள் இல்லை என்பதால் புதிய ஆட்சி பிரதேசத்தின் உருவாக்கம் அமெரிக்காவுக்கு புவி சார் தேவையாக இருக்கலாம், அது இலங்கை உடைபடவும் உதவும் என்கிற குறுகிய வாய்ப்பையும் இவர்கள் கண்ணுக்கு தெரிவதில்லை.

எந்த அடிப்படையிலும் இலங்கை உடைந்துவிட கூடாது என்பதில் குறியாக இருக்கும் இந்தியாவே இவர்கள் கண்ணுக்கு "பரவாயில்லை" போல தோன்றுகிறது எதனால்?

இங்கு உலவும் "அரைவேக்காடுகள்" இன்னமும் மக்களிடம் அமெரிக்கா பூச்சாண்டியை காட்டி இந்தியாவை காப்பாற்றுவதையே தங்களது ஆகப்பெரிய அரசியல் தந்திரம் என்று நம்பிக்கொண்டுள்ளனர். அவர்களின் முகத்திரையை கிழிப்பது எவ்வாறு?

நாம் இந்த பகல்கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும், அமெரிக்காவுக்கான தண்டனை அவனுக்கும்.. இந்தியாவின் துரோகத்துக்கான தண்டனை இந்தியாவுக்கும் கிடைக்க செய்வது எப்படி?

நாங்கள் குறைகளையே சொல்கிறோம் தீர்வை முன்வைக்கவில்லை என்று புலம்பும் நபர்களுக்காக அடுத்த விரிவான பதிவு.. அதில் தீர்வுகள் பற்றி பதிவோம். அதுவரை இந்தியாவை கக்கத்தில் வைத்து சோறூட்டும் ஏமாற்றுக்காரர்களின் சாயங்களை வெளுக்க செய்வோம்.

இந்தியாவை நோக்கிய சரியான போராட்டங்கள் இல்லாமல் செவ்வாய் கிரகத்தையும், கச்சியோபியாவையும் முற்றுகையிடும் முட்டாள் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம். தமிழர்களின் கோபம் திரும்பட்டும் இந்தியாவை நோக்கி.

Image courtesy : http://www.asiantribune.com/node/73742

Comments

Popular posts from this blog

இலங்கையின் இனப்படுகொலையின் மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு கோரி - கருத்தரங்கம்

ஈழ விடுதலையும், மாயமான் வேட்டையும்..